2021ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 2020ம் ஆண்டு 94வது இடத்தில் இந்தியா ஒரே வருடத்தில் 101வது இடத்திற்குச் சென்றது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசே காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பசியை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என கிண்டல் செய்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வறுமை, பசியை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். குளோபல் ஹங்கர் இன்டெக்ஸில் பசி தீவிரமான நாடுகளில் இந்தியா 2020ம் ஆண்டு 94வது இடத்திலிருந்தது. தற்போது 2021ல் 101வது இடத்திற்குச் சென்றுள்ளது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷை காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது" எனப் பதிவிட்டு பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.