கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரீஷ்மா. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 9ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் 95 மதிப்பெண்களைப் பெற்றார்.
இதையடுத்து 10ஆம் வகுப்பில் பொதுத் தேர்வை எழுதப்போகிறோம் என்ற உற்சாகத்தோடும், பல கனவுகளோடும் படித்து வந்தார். ஆனால் விவசாயிகளான இவரது பெற்றோர் அவருக்கான பள்ளி கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் செலுத்துவதில் சிரமம் இருந்தது.
இதையடுத்து பொதுத் தேர்வு நெருக்கியபோது சக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் கிரீஷ்மாவுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது கல்விக் கட்டணம் செலுத்தினால்தான் தேர்வெழுத அனுமதிக்க முடியும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து மாணவியும், அவரது பெற்றோரும் கர்நாடக கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து, தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அவரது பெற்றோர் மகளை மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றினர். இதுகுறித்து அறிந்த அமைச்சர் கிரீஷ்மாவை சந்தித்து துணைத் தேர்வு எழுதும்போது அனுமதி அளிப்பதாக உறுதியளித்தார். இந்தச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த மாதம் துணைப் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கிரீஷ்மா தேர்வு எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்ததை அடுத்து கிரீஸ்மா 625 மதிப்பெண்களுக்கு 599 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.