பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். இவர்களின் திட்டத்தைத்தான் பா.ஜ.க செயல்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறது.
அண்மையில் கூட கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, இந்தியா முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரசு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியே ஆஸ்.எஸ்.எஸ்-சின் கைப்பாவையாக இருப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக பா.ஜ.க அமைச்சர் கூறியிருப்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக உள்ளது.
இதுகுறித்து, கர்நாடகா கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுகான், "இந்தியா மற்றொரு பாகிஸ்தானாக மாறாமல் இருப்பதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ்.தான். இவர்களின் கீழ் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. இந்திய மக்கள் எந்த நாட்டை கண்டும் பயப்பட வேண்டியதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தப் பேச்சே இந்தியாவை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.