1932ல் ஜே.ஆர்.டி. டாடாவால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு அரசுடமையாக்கப்பட்டது. அதன் பிறகு தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் ம்ற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தது.
இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கப் போவதாகவும் அதற்கான ஏலத்தில் பங்கேற்கவும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறின.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை ரத்தன் டாடா 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, ‘வெல்கம் பேக் ஏர் இந்தியா’ என கேப்ஷன் இட்டு, டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தனது தாத்தாவுமான ஜே.ஆர்.டி. டாடா ஏர் இந்தியா விமானம் முன் இருக்கும் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ரத்தன் டாடா.
அவரது பதிவில், “ஏர் இந்தியா ஏலத்தில் டாடா குழுமம் வென்றுள்ளது மகிழ்ச்சி. ஜே.ஆர்.டி. டாடா தலைமையில் இருந்தபோது உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்தது ஏர் இந்தியா. அந்தப் பெருமையையும் மதிப்பையும் மீண்டும் டாடா குழுமம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் பழையபடி நிலைநிறுத்திவைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதேசமயத்தில் விமானத் துறையில் டாடா நிறுவனம் வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும் என்றும் நம்புகிறோம். இந்த நேரத்தில் ஜே.ஆர்.டி.டாடா இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.