இந்திய நாட்டை மனுதர்ம காலத்திற்கு பா.ஜ.க அரசு கொண்டு செல்கிறது என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், ஜனதா தளம் (எஸ்) கட்சித் தலைவருமான குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குமாரசாமி, "ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க தலைவர்கள் எங்கு சென்றாலும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஏன் செல்ல வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில்தான் பா.ஜ.க இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ் கைகளில் பிரதமர் மோடி ஒரு கைப்பாவையாக உள்ளார்.
கர்நாடக மாநில அரசும் முற்றாக ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கேசவ கிருபாவுக்குச் சென்ற இரண்டாவது முதலமைச்சர் பசவராஜ் பொம்மையாவார். 2016ஆம் ஆண்டு மட்டும் 676 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை. நாட்டை மனுதர்ம காலத்திற்கு எடுத்துச் செல்வதே அவர்களின் நோக்கம். நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை பொதுப்பணித்துறையில் அதிகாரிகளாக ஊடுருவச் செய்து பா.ஜ.க தன்னுடைய திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.
இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளாக நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.