தமிழகத்தில் ஆட்சியமைத்ததும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெட்ரோலுக்கான வரியை 3 ரூபாய் குறைத்தார். இந்த அதிரடி நடவடிக்கையை தமிழக மக்கள் வெகுவாகப் பாராட்டினர். இதேபோல ஒன்றிய அரசும், பெட்ரோல், டீசல்விலையுயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக களமிறங்க வேண்டும் என ‘தினகரன்’ நாளேடு 2.10.2021 தேதியிட்ட இதழில் ‘வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அது பற்றிய விவரம்வருமாறு:-
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை குறைக்கப்படுமென திமுக தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆட்சியமைத்ததும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெட்ரோலுக்கான வரியை ரூ.3 குறைத்தார். இதனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100க்கு குறைவாக இருந்தது. இதனால் அரசுக்கு நிதி பாதிப்பு ஏற்படும் என்ற சூழலிலும் கூட, தங்களின் சிரமங்களை உணர்ந்து முதல்வர் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டினர்.
முன்னதாக, பெட்ரோல் விலையை குறைக்க திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்ட தமிழக பாஜவினர், ஒன்றிய அரசிடம் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து வாய் திறக்காதது ஏன்? தமிழக அரசு போல, ஒன்றிய அரசும் வரியை குறைத்தால் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பயனடைவார்கள். ஆனால், மக்களை வாட்டி வதைக்கும் வேளாண் திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டும் ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், நேற்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே 22, 29 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரூ.100க்கும் குறைவாக இருந்த பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி உள்ளது. மதுரையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.11க்கும், டீசல் ரூ.95.31க்கும் விற்பனையானது. மேலும், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பாடா... வீடுகளுக்கான மானியமில்லா சிலிண்டர் விலையை உயர்த்தவில்லை என பெருமூச்சு விட வேண்டாம். வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்ந்தால் ஓட்டல் உணவுகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி மேலும் அதிகரிக்கும். தற்போதைய நிலவரப்படி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,867.50 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் நீங்கலாக மற்ற மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.105, டீசல் விலை ரூ.95ஐ தாண்டி உள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் படிப்படியாக டீசல் விலை ரூ.1.48 வரை அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், விரைவில் டீசல் விலையும் ரூ.100ஐ தாண்ட வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்தால் நடுத்தர, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படும். அவர்களது பொருளாதார சுமை மேலும் அதிகரிக்கும். எனவே, தமிழக அரசு பெட்ரோல் வரியை குறைத்தது போல, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு உடனடியாக களமிறங்க வேண்டும்.