பச்சைப் புடவை கட்டினால் கணவனின் ஆயுள் கூடும் என்பது போன்ற பல மூடநம்பிக்கை வதந்திகளைத் தமிழ்நாட்டில் நாம் கேட்டிருப்போம். இதேபோன்று ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
வட மாநிலங்களான பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின்போது குழந்தைகள் நோயின்றி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒருநாள் முழுவதும் நோன்பு இருப்பார்கள்.
இந்நிலையில் இந்தாண்டு அந்தப் பண்டிகை செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டது. பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தில் ஜிதியா பண்டிகையில் 'ஆண் குழந்தைகள் பார்லே ஜி பிஸ்கட் சாப்பிடாமல் இருந்தால், அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும்' என்ற வதந்தி வேகமாகப் பரவியது.
இதையடுத்து பெற்றோர்கள் கடைகளில் இருக்கும் பார்லே-ஜி பிஸ்கட்டை வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தனர். இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவியதால் பார்லே-ஜி பிஸ்கட் வாங்க பலரும் கடைகளுக்கு முண்டியடித்தனர்.
திடீரென பார்லேஜி பிஸ்கட்டுக்கு கிடைத்த மவுசால் ரூ.5க்கு விற்பனையாகும் பிஸ்கட்டை ரூ. 50 வரை விற்று பல கடைக்கார்கள் கொள்ளை லாபம் பார்த்தனர். பல கடைகளில் சில நிமிடங்களிலேயே அனைத்து பார்லே-ஜி பிஸ்கட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
மேலும் இந்த மாவட்டம் மட்டுமல்லாது பர்கானியா, தேஹ், நான்பூர், பாஜ்பட்டி, மேஜர்கஞ் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த வதந்தி பரவியதால் பீகார் முழுவதும் பெற்றோர்கள் பார்லே-ஜி பிஸ்கட் வாங்க வீதி வீதியாக அலைந்தனர். இந்த வதந்தி எப்படிப் பரவியது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.