கொரொனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய பேரிடர் நிவாரண மேலாண்மை ஆணையம் வெளியிட்டு அதனை நேற்று (செப்.,22) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நியாமான ஒரு தொகையை இழப்பீடாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இது தொடர்பாக ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதனை மாநில அரசுகள் தங்களது பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும். அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாநில அரசுகள் நிதிப்பற்றாக்குறையால் தவித்து வரும் வேளையில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் மாநில அரசு மீது திணிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தாக்கத்தை சரிசெய்வதற்காக பேரிடர் நிவாரணை நிதியை பயன்படுத்துமா அல்லது கொரோனாவால் பலியானவர்களுக்காக பயன்படுத்துமா என்ற இக்கட்டான சூழலுக்கு ஒன்றிய பாஜக அரசு தள்ளுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் என பல்வேறு வரி வருமானங்களை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் வேளையில் தற்போது இந்த சுமையையும் மாநில அரசுகளுக்கு மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.