பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் பசவராஜ் பொம்மையை முதல்வராக பா.ஜ.க மேலிடம் அறிவித்தது.
தற்போது குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பூபேந்திர படேலை முதல்வராக பா.ஜ.க மேலிடம் தேர்வு செய்து அறிவித்து புதிய முதல்வராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க முதல்வர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, பதவி பறிபோகும் என்ற பயத்திலேயே பா.ஜ.க முதல்வர்கள் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி, "எம்.எல்.ஏக்களுக்கு தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று வருத்தம். அமைச்சர் பதவி கிடைத்தவர்களுக்கு வேண்டிய துறைகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம். முதல்வராக இருப்பவர்களுக்கு எப்போது பதவி பறிபோகும் என்று வருத்தம்.
ஆனால் அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கி ஓடுவது கிடையாது. நமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் கடைசி நிலையில் இருப்பவருக்கும் உதவிகள் சென்று சேர வழி ஏற்படுத்திக் கொடுப்பதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சரின் இந்த கருத்தால் பா.ஜ.க வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சொந்தக் கட்சியினர் என்றும் பாராமல் இப்படியா செய்வது என நிதின் கட்காரியின் பேச்சை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.