இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்து இதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உருவாக்கியதை பா.ஜ.க அரசு 7 ஆண்டுகளிலேயே விற்றுவிட்டது என கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியத் தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்தான் இந்த கருத்தை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்," மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அப்போது ஊடகங்கள் அவரை பலவீனமான பிரதமர் என விமர்சித்தன. ஆனால் புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை.
காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இது அனைத்தையும் பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது. பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கின்றன" என தெரிவித்துள்ளார்.