இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிதாக ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மர்ம காய்ச்சலுக்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு டெங்கு அல்லது உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்குமோ என மருத்துவர்கள் கருதிவந்த நிலையில் இவற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த மர்ம காய்ச்சலுக்கு ஸ்க்ரப் வைரஸ் (Scrub Typhus) காரணம் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மதுரா மாவட்டத்தில் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் இருந்து மருத்துவக்குழுவினர் இதனை உறுதி செய்துள்ளனர்.
மேலும், இந்த ஸ்க்ரப் வைரஸ் உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் அசாம் மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை போல் இந்த வைரஸும் வேகமாகப் பரவுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நோயின் அறிகுறிகளாக, காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள் ஆரம்பகட்டத்தில் இருக்கும் என்றும் தீவிரமடைந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம், இதய செயலிழப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதுபோல், இந்தோனேஷியா, ஜப்பான், வடகிழக்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.