கர்நாடகாவில் கொரோனா தொற்று குறைந்துவந்த நிலையில் அங்குள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் மாணவிகள் 32 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்து காணப்படுகிறது.
இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அந்த நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும் கேரளாவில் இருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த நர்சிங் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கேரளா - கர்நாடகா எல்லையில் உள்ள கோலார் மாவட்டத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான கேரள மக்கள் வருகை தருவதால் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனையடுத்து, கேரளாவில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.