இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட 75 வது சுதந்திரதின ஆண்டு விழாவை சித்தரிக்கும் போஸ்டரில் ஜவர்கர்லால் நேரு படம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒன்றிய கல்வித்துறையின் கீழ் இயங்கும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், அம்பேத்கார், சர்தார் வல்லபாய் பட்டேல், மதன்மோகன் மாளவியா, சார்வர்கர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் முதல் பிரதமரான நேருவின் படம் திட்டமிட்டு கைவிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த செயல் கொடூரமான, அற்பத்தனமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகியிருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று அவர்களது தலைவர்களின் படங்களை இடம்பெறச் செய்துள்ளது. ஆனால் நேருவின் படத்தை திட்டமிட்டு நீக்கியுள்ளது என்று மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கௌரவ் கோகோய் கண்டனம் தெரிவித்துள்ளார்.