இந்தியாவில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் விரோத சட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக, புதிய வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு என மக்களுக்கு விரோதமான சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், மோடி அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருகிறது.
மேலும் கொரோனா தொற்றை பா.ஜ.க அரசு முறையாகக் கையாளாததால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் நெருக்கமானவர்களை இழக்க நேரிட்டது. மேலும் தொடர்ந்து கொரோனாவை தவறான நிர்வாகம் கொண்டே கையாண்டு வருகிறது. இப்படித் தொடர்ந்து மக்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய அரசு உருவெடுத்துள்ளது. இதனால் ஒன்றிய அரசுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் புகழ் 66%ல் இருந்து 24% ஆக குறைந்துள்ளதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து இந்தியா டுடே நாளேடு கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது.
2020ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடிக்கு 66% மக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. . பின்னர் 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 24% மட்டுமே மோடிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டதாக 29% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் மோடி அரசால் வேலையின்மை பிரச்சனை பிரதானமாக உருவெடுத்துள்ளதாக 23% பேர் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை ஒன்றிய அரசு கூறியதை விட அதிகமாக இருக்கும் என 71% பேர் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவல் தங்களின் வருவாய் குறைந்துள்ளதாக 69% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.