திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பா.ஜ.கவினர் தாக்கிய சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபரூபா பொட்டர், டோலோ சென் ஆகியோர் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றுவதற்காக தெற்கு திரிபுரா மாவட்டத்தின் பெலோனியா நகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கார்களை வழிமறித்த கும்பல் ஒன்று கார்கள் மீது திடீரென செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எம்.பிக்கள் வந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் டோலோ சென்னின் உதவியாளர் ஜாகிர் தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து எம்.பி டோலா சென், எங்களை தாக்கியவர்கள் கைகளில் பா.ஜ.க கொடி இருந்தது. மேலும் நாங்கள் தாக்கப்பட்டபோது போலிஸார் அமைதியாக வேடிக்கை பார்த்தனர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிபுராவில் பா.ஜ.க குண்டர்கள் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டிவிட்டனர். இது முதலமைச்சர் பிப்லாப் குமார் தலைமையிலான குண்டர் ராஜ்ஜியத்தை வெளிப்படுத்தியுள்ளது என திரிபுரா பா.ஜ.கவை கடுமையாகச் சாடியுள்ளார்.
திரிணாமுல் காங். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதலை பா.ஜ.க மறுத்துள்ளது. திரிணாமுல் தலைவர்கள் மீது தொடர்ச்சியாகப் பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.