ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. கல்லூரி ஒன்றில் பி.டெக் மூன்றாம் ஆண்டு பிடித்து வந்தார். இவர் நேற்று இரவு உணவு வாங்குவதற்காக வீட்டின் அருகே இருக்கும் உணவகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், ரம்யாவை வழிமறித்து வாகனத்தில் வருமாறு கூறியுள்ளார். இதற்கு ரம்யா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரம்யா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரைப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் ரம்யாவை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், ரம்யாவை, வாலிபர் ஒருவர் குத்திக் கொலை செய்தது தொடர்பான சி.சி.டி.வி காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபர் யார் என விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ரம்யாவை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த சசிகிருஷ்ணா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மறைந்திருந்த இடத்திற்குச் சென்ற போலிஸார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது சசிகிருஷ்ணா தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
பின்னர், போலிஸார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரம்யாவை ஏன் கொலை செய்தார்? என்பது குறித்து போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதல் விவகாரம் ஏதாவது இருக்கிறதா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
நாட்டின் 75வது சுதந்திர தினமான நேற்று கல்லூரி மாணவி நடுரோட்டில் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இன்னும் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என பெண்கள் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.