இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்த ஆய்விற்கு வேலூர் சி.எம்.சி.,க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியும் போடப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. சில இடங்களில் முதல் டோஸ் ஒரு நிறுவன தடுப்பூசியும், 2வது டோஸ் வேறு நிறுவன தடுப்பூசியும் போடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.
இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், அப்படி போடுவது பாதுகாப்பானது மட்டுல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் ஏற்படும் பயன்கள், விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வேலூர் சி.எம்.சி.,யில் 300 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை கலந்து செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.