இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13 முதல் 15 வயதுள்ள பள்ளி செல்லும் சிறுவர்களிடையே புகையிலைப் பயன்பாடு குறித்து ஐ.ஐ.பி.எஸ் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வில், பத்து வயதிற்குள்ளாகவே 38% சிறுவர்கள் சிகரெட் புகைப்பதைத் தொடங்கிவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பள்ளி செல்லும் மாணவர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
அதேபோல், இமாச்சல பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே மாணவர்களிடம் புகையிலை பழக்கம் உள்ளது. சிகரெட் புகைக்கும் சிறுவர்களின் சராசரி வயது 11.5 ஆகவும், பீடி புகைப்பவர்களின் சராசரி 10.5 வயதாகவும் உள்ளது என அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 987 பள்ளிகளிலிருந்து 97 ஆயிரத்தி 302 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோன்று 2003, 2006, 2009-ம் ஆண்டில் 3 சுற்று ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "குழந்தைகளிடையே புகையிலை குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்களும், பெற்றோர்களும்தான் ஏற்படுத்த வேண்டும். பெரியவர்களிடையே புகைப் பழக்கம் குறைந்தால் அது சிறுவர்கள் புகைப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.