இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் கோரத் தாண்டவத்தில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையை ஒன்றிய பா.ஜ.க அரசு உயர்த்தி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது.
பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சைக்கிள் பேரணி நடத்தினர்.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை கடந்த 19 நாட்களாக விலை உயராமல் இருப்பதற்குக் காரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 19 நாட்களாக மாற்றம் இல்லை. ஏனெனில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் 19ஆம் தேதி தொடங்கி, 18 நாட்கள் ஆகிறது.
பெகாசஸ் மென்பொருள் செல்போனில் ஊடுருவி இருப்பதாலும், இஸ்ரேலியர்கள் கேட்டுக்கொண்டு இருப்பதாலும் எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.
அனைத்து துறையின் தலைமை அதிகாரிகள் 15ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை.” எனப் பதிவிட்டுள்ளார்.