உத்தர பிரதேச மாநிலம் பாபத் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிவம் நண்பர்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் பகத்சிங் நாடகம் நடத்த முடிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து தனது வீட்டில் நாடகத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை ஒத்திகை செய்துள்ளனர்.
இதற்காக சிவம் நாற்காலி ஒன்றின் மீது ஏறி, கழுத்தில் தூக்குக் கயிறு கட்டிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென நாற்காலி நழுவி கீழே சாய்ந்துள்ளது. இதனால் சிவம் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரிவிக்காமலேயே சிவத்தின் பெற்றோர் அவரின் உடலைத் தகனம் செய்துள்ளனர். இதுபற்றி அறிந்து கிராமத்திற்கு வந்த போலிஸார் சிறுவன் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாடகத்திற்கான ஒத்திகையின்போதுதான் சிறுவன் இறந்தானா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டும் மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சூர் மாவட்டத்திலும் இதேபோன்று பகத்சிங் நாடகத்தின் போது சிறுவன் ஒருவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.