கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறவில்லை. இதனால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து.
இந்த அரசை பா.ஜ.க பல்வேறு திரைமறைவு பேரங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்திக் கலைத்தது. பின்னர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அம்மாநில பா.ஜ.கவிற்குள் உட்கட்சி பூசல் வெடித்தது.
முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பா.ஜ.க எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவைப் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்தார் எடியூரப்பா. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போதுகூட, “முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவில்லை. அதுகுறித்து வரும் தகவல்கள் வதந்தி” என எடியூரப்பா கூறினார்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தொடர் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் முதலமைச்சர் எடியூரப்பா இன்று கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
இவர் கடந்த 2019ம் ஆண்டு நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். முதலமைச்சராகப் பதவியேற்று இரண்டே வருடத்தில் பதவியிலிருந்து விலகியுள்ளார் எடியூரப்பா. நான்கு முறையும் எடியூரப்பாவால் முழுமையாக பதவிகாலத்தை பூர்த்தி செய்யமுடியவில்லை.
மேலும், எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்ற அதே தேதியில் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அடுத்த முதலமைச்சர் யார் என்ற போட்டி அம்மாநில பா.ஜ.கவிற்குள் எழுந்துள்ளது.