இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கின்னோர் மாவட்டம், சங்லா பள்ளத்தாக்கில் நேற்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பள்ளத்தாக்கின் அடிவாரத்திலிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பெரிய பாறைகள் விழுந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை 9 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். ஆயூர்வேத மருத்துவரான தீபா சர்மா தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சல் பிரதேசம் சென்றுள்ளார். மேலும் இமாச்சலப் பிரதேசத்தின் நாகஸ்தி பகுதியில் நின்ற படி பல படங்களை எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரின் அந்த பதிவில், ''பொதுமக்கள் செல்லக்கூடிய இந்தியாவின் கடைசி எல்லையில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த எல்லையைத் தாண்டி சுமார் 80 கி.மீ தூரத்தில் திபெத் எல்லை உள்ளது. அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது" என தான் எடுத்த அழகிய புகைப்படங்களை இணைத்துப் பதிவேற்றியிருந்தார்.
இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே தீபா சர்மா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்து அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் வேதனையடைந்துள்ளனர். மேலும் மருத்து தீபா சர்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.