மோடி அரசு, இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின் செல்போன் தகவல்களை ஒட்டுக்கேட்டதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது.
இது நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன. மேலும் அதில், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தவேண்டும் எனக் எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் யாரையும் கண்காணிக்கவில்லை, ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டு என ஒன்றிய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சுதந்திரத்தின் அளவுகோலின்படி சுதந்திரமான ஜனநாயகம் கொண்ட பிரான்ஸ், மற்றும் கடினமான ஜனநாயகம் கொண்ட இஸ்ரேலுக்கு எதிராக தரவரிசைப்படுத்த முடியும்.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் அரசு ஒரு விசாரணை கமிஷனையும் உருவாக்கியுள்ளது. ஆனால், எந்தவிதமான அதிகாரபூர்வமற்ற கண்காணிப்பும் செய்யவில்லை என்று மறுக்கும் இந்திய அரசு, இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தவும் மறுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.