இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் கோரத் தாண்டவத்தில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையை ஒன்றிய பா.ஜ.க அரசு உயர்த்தி வருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது.
இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் தங்களின் துயரங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தும் விதமாக பலர் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போடும்போது, அங்கிருக்கும் மோடியின் புகைப்படத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவது போன்று புகைப்படம் எடுத்து அதை #ThankYouModiJiChallenge ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பதிவேற்றி வருகின்றனர்.
தற்போது இந்த ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதேபோன்று பெட்ரோல் பங்கில், தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போடும்போது தரையில் படுத்து கும்பிடுவது போன்றும், தலையில் கைவைத்து அழுவதுபோல் என இப்படிப் பல விதமாக தங்களின் துயரங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தும் விதமாகப் புகைப்படம் எடுத்துப் பதிவேற்றி வருகிறார்கள்.
மேலும் #ThankYouModiJiChallenge ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தில் அனைவரும் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பலரும் புகைப்படம் எடுத்து இந்த பிரச்சாரத்தில் இணைந்து வருகிறார்கள்.