இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பா.ஜ.கவைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்குர் எம்.பி உள்ளிட்ட பலர் கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை எனக் கூறி வருகின்றனர். மேலும் குஜராத் போன்ற பா.ஜ.க மாநிலங்களில், இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி மாட்டுச்சாணம்தான் என அறிவியலுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு மூடநம்பிக்கையை விதைத்தனர்.
இதையடுத்து, மணிப்பூர் பா.ஜ.க தலைவர் திகேந்திர சிங் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தார். அப்போது, அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்தர வாங்கே மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசாம்பன் ஆகியோர், கோமியம் மற்றும் மாட்டுச்சாணம் கொரோனாவில் இருந்து பாதுகாக்காது என தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து மணிப்பூர் அரசு பத்திரிகையாளர் கிஷோர் சந்தர வாங்கே, சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசாம்பன் இருவரையும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் எரேண்ட்ரோவின் தந்தை, தனது மகன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானதாகும். மேலும் தனிப்பட்ட சுதந்திரம், வாழ்வதற்கான உரிமையில் தலையிடுவது போன்றதாகும்.
எனவே அவரை சொந்த பிணையில் இன்று மாலை 5 மணிக்குள் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேச விரோத சட்டம் தேவையா என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.