இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை எப்படியாவது தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்ற மக்கள் விரோத கொள்கையுடன் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் தனி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் பா.ஜ.கவுக்கு தொடர்புடையவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தனி இயக்குநர்கள் குறித்து ஆங்கில நாளேடு ஒன்று தகவல் உரிமை சட்டம் மற்றும் நேரடியாக 146 பொதுத்துறை நிறுவனங்களிடமும் விசாரணை நடத்தி வெளியிட்ட செய்தியின்படி பா.ஜ.கவுக்கு நெருக்கமானவர்களே அதிகமாக தனி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இந்தியாவில் உள்ள 98 பொதுத்துறை நிறுவனங்களில் 172 தனி இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 67 பொதுத்துறை நிறுவனங்களில் தனி இயக்குநர்களாக பணியாற்றும் 86 பேர் பா.ஜ.க கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் ஏ.ஆர்.மஹாலட்சுமி, லட்சுமி சுரேஷ், ஆர்.கல்யாணசுந்தரம், முன்னாள் ராணுவ வீரர் பி.பி. பாண்டியன், சத்தியநாராயணன், வேல்பாண்டியன், பி.சரவணன், என்.ராஜலட்சுமி, அசிம் பாஷா, கே.ராமலிங்கம் ஆகியோர் தமிழ்நாடு பா.ஜ.க-விலும், துரை கணேசன், அருள் முருகன் ஆகியோர் புதுச்சேரி பா.ஜ.கவிலும் துணை தலைவர்களாக பணியாற்றியவர்கள் என்பதை ஆதாரத்துடன் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுத்துறை நிறுவனங்களை கொள்ளையடித்து பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்க உதவுவதற்காகவே பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மோடி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பிரிட்டிஷ் ஆட்சியை விட அதிகமாக கொள்ளையடிக்கப்படுகிறது" என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.