ஒன்றிய அரசின் கடன் சுமை 2021 மார்ச் மாத நிலவரப்படி ரூ. 116 லட்சத்து 21 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசின் நிதி அமைச்சக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில், கடந்த 2020 டிசம்பர் காலாண்டு இறுதியில் அரசாங்கத்தின் மொத்த கடன்கள் ரூ. 109.26 லட்சம் கோடியாக இருந்தன. ஆனால், தற்போது அது, 2021 ஜனவரி முதல்மார்ச் வரையிலான மூன்றே மாதங்களில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் (6.36 சதவிகிதம்) அதிகரித்துள்ளது.
மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 7 ஆண்டுகளில், அது ரூ. 116 லட்சத்து 21 ஆயிரம்கோடியாக உயர்ந்துள்ளது.
நாடு விடுதலை அடைந்தது துவங்கி,சுமார் 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடியின் 7 ஆண்டுகளில் மட்டும் 62 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது. 2021 மார்ச் இறுதியில் காணப்பட்டமொத்த கடன் சுமையில் பொதுக் கடனின் பங்களிப்பு 88.10 சதவிகிதம் அளவுக்கு இருப்பதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
2021 மார்ச் காலாண்டில் அரசாங்க பத்திரங்களை ஒரே நேரத்தில் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது சம்பந்தப்பட்ட ஒன்பது சிறப்பு மற்றும் சாதாரண திறந்த சந்தை (OMOs) நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.
இதன்மூலம் 2020-21 நிதியாண் டின் ஜனவரி - மார்ச் காலாண்டில், ஒன்றிய அரசு வெளியிட்ட கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்து 349 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2019-20 நிதியாண்டில் ரூ. 76 ஆயிரம் கோடி என்ற அளவிலேயே இருந்தது. இதேகாலத்தில் திருப்பிச் செலுத்துதல் ரூ. 29 ஆயிரத்து 145 கோடியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.