உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் இளம்பெண்ணை மூன்று இளைஞர்கள் மாடியிலிருந்து கீழே வீசும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சி.சி.டி.வி காட்சியில், மூன்று இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். பின்னர் சில நொடிகளிலேயே அந்தப் பெண் மாடியிலிருந்து கீழே விழுகிறார். பிறகு அந்த இளைஞர்கள் அங்கிருந்து தம்பி ஓடுகிறார்கள். பிறகு அப்பெண்ணின் தந்தை அங்கு வந்து கதறி அழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தற்போது அந்த இளம்பெண் உயிருடன் இருப்பதாகவும், அவரின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், இளம்பெண்ணின் தந்தை மூன்று இளைஞர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரில்,"இந்த மூன்று இளைஞர்களும் எங்களின் வீட்டின் அருகே வசிக்கிறார்கள். இவர்கள் கடந்த சில மாதங்களாக எனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.
திங்களன்று ஒருவர் எனக்கு போன் செய்து உங்கள் மகளிடம் பேச வேண்டும் எனக் கூறினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் என்னை ஆபாசமாகத் திட்டினார். பிறகு இந்த மூன்று பேரும் திடீரனெ இரவு வீட்டிற்குள் புகுந்து எனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
நாங்கள் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. பிறகு மகளை தூக்கிச் செல்ல முயன்றனர். அப்போது நாங்கள் கூச்சலிட்டதால் ஆவேசமடைந்த அவர்கள் எனது மகளை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியைத் தேடி வருகின்றனர். இந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த போலிஸ் அதிகாரி ஸ்ரீஷ் சந்தா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியல் அதிகமான பாலியல் குற்றங்களும், கொலைகளும் தொடர்ந்து அதிகர்த்து வருவதாகவும், குற்றங்களை தடுக்காமல் ஆதித்யநாத் அரசு வேடிக்கைப் பார்ப்பதாகவும் சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றனர்.