மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதை தனது முதன்மை திட்டமாகச் செயல்படுத்தி வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றி வரும் ரயில்வே, எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எஸ், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா என பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தது ஒன்றிய அரசு.
இவை போதாது என்று ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களையும் தனியாருக்கு விற்று வருகிறது. மேலும் வங்கிகளையும் தனியாருக்கு விற்க முடிவுசெய்து அதற்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளைத் தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தொடர்பாக பட்ஜெட்டின் போது ஒன்றிய அரசு அறிவித்தது. அப்போது பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் நிதியைத் திரட்டப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தொடர்பான அறிக்கையை நிதி ஆயோக் ஒன்றிய அரசிடம் வழங்கியுள்ளது.
அந்த அறிக்கையில் சென்ட்ரல் பேங், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருக்கும் வங்கிகளில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்டிரா வங்கியும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது கொரோனா நெருக்கடியால் தாமதமானாலும், வங்கிகளை விற்பதில் ஒன்றிய அரசு உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.