இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதிலிருந்தே மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என மருத்துவர்களும், அரசுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் சர்ஜிக்கல் மாஸ்க், துணி மாஸ்க் போன்றவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய பிரதசே மாநிலத்தில் உள்ள தனியார் ஆலையில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் மற்றும் பி.பி.இ கிட்கள் மீண்டும் மறு சுழற்சி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சாட்னா உட்பட ஏழு மாவட்டங்களிலிருந்து உயிர் மருத்துவக் கழிவுகள் விஞ்ஞான ரீதியாக அகற்றுவதற்காக பார்கேடாவில் உள்ள இந்தோ நீர் உயிர் கழிவு அகற்றும் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ஆலையில்தான் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் மறு சுழற்சி செய்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வைரலான அந்த வீடியோவில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பி.பி.இ கிட் உடைகள் மற்றும் முகக்கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை மூட்டை மூடையாக பிளாஸ்டிக் பைகளில் குவித்துவைக்கப்பட்டுள்ளன. பின்னர் இந்தப் பையில் இருக்கும் முகக்கவசம் உள்ளிட்டவற்றை எடுத்து, சூடான நீரில் கழுவி, பிறகு புதிது போன்று மாற்றி, அவற்றை தனியாக பார்சல் கட்டி வைக்கப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, உள்ளூர் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சத்னா ராஜேஷ் ஷாஹியின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் கூறுகையில், "இந்த வீடியோவின் முழு விவவரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் குழு சம்பந்தப்பட்ட உயிர் கழிவு ஆலைக்கு சென்று விசாரித்து உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.