இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. கடந்த 20 நாட்களாகவே உயிரிழப்பு எண்ணிக்கை நாள்தோறூம் 4 ஆயிரத்திற்கு மேல் பதிவாக வருகிறது.மேலும் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், தந்தை, தாய், அக்கா, தங்கை, தம்பி என நெருங்கிய உறவுகளை இழந்து மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து பல குழந்தைகள் அனாதையாகி வருகிறார்கள், அவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, மத்திய அரசு, மாநில அரசுகளுடன் தகவல்களைக் கேட்டுப் பெற்றது. இதில் ஏப்ரலில் இருந்து மே 25ம் தேதி வரை கொரோனா இரண்டாவது அலையில் 577 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த குழந்தைகள் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருவதாகவும், அவர்களைத் தொடர்ந்து மாநில அரசுகள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.