இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தொற்று எண்ணிக்கை 3 லட்சத்துக்குக் குறைவாகப் பதிவாகி வந்தாலும், உயிரிழப்போர் எண்ணிக்கை 4,500-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதேபோல், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, டெல்லி மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இளம்பெண் ஒருவர் கொரோனா பாதித்து ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கி உ.பி மக்களின் மனங்களில் இடம்பிடித்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உத்தரகாண்ட் எல்லையில் உள்ளது ஷாஜஹான்பூர். இப்பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷி. இவருடைய தந்ததைக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிறகு அவர் தந்தையை அழைத்து மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால், வீட்டிலேயே அவருக்குச் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து, தந்தைக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டபோது உத்தரகாண்டில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று உதவி செய்துள்ளது. இதையடுத்து அவரின் தந்தை கொரோனா தொற்றிலிருந்து மீண்டதையடுத்து, அந்த தொண்டு நிறுவன உதவியுடன் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கி வருகிறார்.
இது குறித்து அர்ஷி கூறும்போது,"உத்தரகாண்ட் என்.ஜி.ஓக்களால் எனது தந்தை கொரோனாவிலிருந்து குணமாகி உயிர் பிழைத்தார். இதே முறையைப் பயன்படுத்தி இங்கு பாதிக்கப்படும் மற்றவர்களுக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை அளிக்க முடிவு செய்து அளித்து வருகிறேன். இதுவரை, எனது ஸ்கூட்டியில் வைத்து சுமார் 45 சிலிண்டர்களை இலவசமாக கொடுத்துள்ளேன்.
மேலும் எனக்கு கிடைத்த சிலிண்டரில் 18 முறை ஆக்சிஜன் நிரப்பி தேவையானார்களுக்குக் கொடுத்து உதவியுள்னேன்" எனத் தெரிவித்துள்ளார். அர்ஷியின் இந்த மனிதநேயத்தைப் பார்த்து ஷாஜஹான்பூர்வாசிகள் செல்லமாக அவரை ‘சிலிண்டர்வாலி பேட்டியா’ (சிலிண்டர் மகள்) என் அன்போடு அழைத்து வருகின்றனர்.