கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை, ஆச்சிஜன், தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அட மழை பெய்யும் போது கூறை ஒழுகும் தானே என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மோடி அரசை விமர்சித்துள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இரண்டாவது அலை தொடங்கிய போது இதுவும் முதல் அலை போன்று மெதுவாக உயர்ந்து, சமநிலைக்கு வந்து, பிறகு ஓய்ந்து விடும் என்று அரசு கருதியது. ஆகவே, இரண்டாம் அலையின் வேக உயர்வுக்கும் பரவலுக்கும் அரசிடம் எந்தத் திட்டமுமில்லை.
மேலும், மூன்றாம் அலை, நான்காம் அலை வந்தால் அவற்றைச் சந்திப்பதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது. பெருந் தொற்றைக் கட்டுப்படுத்தவதற்கு ICE என்ற மும்முனை அணுகுமுறை வேண்டும். அது அரசிடம் இல்லை. முதல் அலையின் போது சுயவிளம்பரமும் வெற்றிக்களிப்புமே இருத்தன.
இரண்டாம் அலையின் போது அரசின் அணுகுமுறை உண்மைகளை மறுப்பது மற்றும் மறைப்பது, பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வது தாம். இதன் விளைவு, பெருங் குழப்பம். மேலும், எதிர்கால தேவைகளுக்கு, ஆக்ஸிஜன், வென்டிலேடர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை. தேவையான செவிலியர்களை வேலையமர்த்த எந்தத் திட்டமும் இல்லை.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கத் தவறியது. 29-03-2021 அன்று தான் தடை செய்யப்பட்டது. அதற்குள் 5.8 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இரண்டு கம்பெனிகளுமே மானியமோ முதலீடோ கடனோ எதிர்பார்த்தார்கள். தடுப்பூசி சப்ளைக்கு மத்திய அரசு முன்பணம் (அட்வான்ஸ்) தந்ததே அன்றி வேறு பணம் தரத் தவறியது.
இரண்டு இந்திய கம்பெனிகள் ஒரு மாதத்தில் எத்தனை தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று கணிக்கத் தவறியது. அதிசயம் ஆனால் உண்மை. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை. நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்க மத்திய அரசு போடத் தவறியது.
இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் தடுப்பூசி தயாரித்துத் தர மத்திய அரசு ஆர்டர் தந்த நாள் 11-01-2021. அவர்கள் தங்கள் முயற்சியில் தயாரித்திருந்த தடுப்பூசி இருப்பிலிருந்து தந்தார்கள். அவர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த ஊக்கமும் தரத் தவறியது.
தடுப்பூசி போட்டதின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏப்ரல் 2ம் நாள் 42 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் ஏப்ரல் மாத நாள் சராசரி 30 இலட்சமே. மே மாதத்தில் இதுவரை நாள் சராசரி 18 இலட்சம் தான். தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது
முதல் அலை ஓய்ந்த போது பரிசோதனைகள் தொய்வடைந்தன. பரிசோதனை மாதிரிகள் குறையும் போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும் தானே? வெயில் அடித்த போது கூறையை செப்பனி செய்யவில்லையென்றால், அட மழை பெய்யும் போது கூறை ஒழுகும் தானே?
கொரோனா முதல் அலையின் போது உருவாக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டமைப்புகள் அக்டோபர் 2020 க்குப் பிறகு பராமரிக்கப்படவில்லை. இரண்டாவது அலை தொடங்கியபோது எஞ்சியிருந்த கட்டமைப்புகள் போதுமானவை அல்ல என்பது அம்பலமாகியது” என தெரிவித்துள்ளார்.