‘இந்திய அரசைக் காணவில்லை’ என ‘அவுட்லுக்’ ஆங்கிலப் பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் “பெயர்-இந்திய அரசு, வயது -7 மற்றும் கண்டுபிடித்தால் குடிமக்களிடம் தெரிவியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அவுட்லுக்’ ஆங்கிலப் பத்திரிகையின் இந்த முதல் பக்க அட்டைப்படம் (கவர் போட்டோ) தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ‘அவுட்லுக்’ இந்திய நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்று.
இந்தியாவில் நிலவும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால் தினசரி லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் இந்தத் தொற்றுக்கு பலியாகி வருகின்றனர். இந்திய அரசு இந்த பேரிடர் காலத்தைகையாளும் விதம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிபுணர்கள் முன்கூட்டியே இந்த 2-ஆம் அலை குறித்து எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியது பலரின் கண்டனத்திற்கும் உள்ளானது. நாட்டில் தற்போது 3வது அலைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2 வது அலையின் உக்கிரத்தால் சடலங்கள் குவிந்துள்ளன. கங்கையில் சடலங்கள் மிதக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
புனித நதியாக மதிக்கப்படும் கங்கை இன்று சடலங்களைச் சுமந்துகொண்டிருக்கிறது. மின்மயானங்களில் சடலங்கள் 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கும் காட்சிகள் மனதைப் பிசைகின்றன. நாட்டில் இவ்வளவு துயரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது மத்திய அரசு இதைக் கையாள சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததை விமர்சிக்கும் வகையில் ‘அவுட்லுக்’ பத்திரிகை “இந்திய அரசைக் காணவில்லை” என முதல் பக்க அட்டைப்படம் வெளியிட்டுள்ளது.
அந்த அட்டைப்படத்தில்,
“காணவில்லை”
பெயர் : இந்திய அரசு!
வயது : 7 வருடங்கள்
தகவல் : இந்திய குடிமக்கள்
(கண்டுபிடித்தால் இந்திய குடிமக்களிடம் தகவல் தெரிவியுங்கள்) - என மே 24, 2021 ‘அவுட் லுக்’(Outlook) ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள இந்த முதல் பக்க அட்டைப் படம் தற்போது இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.