இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்குப் படுக்கை வசதி கிடைக்காததாலும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதிலும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தாததால், அம்மாநில மக்களுக்கு கொரோனாவுக்கு உரியச் சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக மடிந்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், கோவா மாநிலம், பாம்போலிம் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆக்சிஜன் வசதி கிடைக்காததால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
பின்னர், இதுபற்றி அறிந்த மாநில முதலமைச்சர் பிரமோத் சவந்த், மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பிறகு அவர் பேசுகையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லையென்றும், ஆக்சிஜனை நோயாளிகளுக்கு விநியோகிப்பதில் தவறு நிகழ்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு நாள் அதிகாலையும், ஆக்சிஜன் விநியோக பிரச்சனை காரணமாகப் பலர் உயிரிழப்பதாகக் கூறியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் நேரடியாக விசாரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவா அரசு மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.