இந்தியா

புதுச்சேரியில் மக்களாட்சி மாண்பை சீர்குலைத்த பா.ஜ.க: நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமித்து மோடி அரசு அடாவடி!

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்காத நிலையில் 3 நியமன எம்.எல்.ஏ.,க்களை தன்னிச்சையாக நியமித்து மத்திய பா.ஜ.க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் மக்களாட்சி மாண்பை சீர்குலைத்த பா.ஜ.க:  நியமன எம்.எல்.ஏ.,க்களை  நியமித்து மோடி அரசு அடாவடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க., கூட்டணி சார்பில் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7ந் தேதி பதவியேற்றார்.

கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர்(பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் பதவிபிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். ரங்கசாமியின் அமைச்சரவை சகாக்கள் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அன்றையதினம் அவர் மட்டுமே பதவியேற்றார்.

10 தொகுதிகளில் வெற்றிபெற்ற என்.ஆர்.காங்கிரஸ், 6 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க., இடையே புதிய அமைச்சர்களை நியமிப்பதில் யாருக்கு எத்தனை அமைச்சர்கள் என்பதில் ஏற்பட்ட சிக்கல் இன்னமும் தீரவில்லை. சின்னஞ்சிறு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணை முதல்வர் என்ற பதவியே இல்லை என்ற நிலையில் அப்படி ஒரு பதவியை உருவாக்கிட பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.

ஒரு துணை முதல்வர், 2 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவியை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், துணை முதல்வர் என்ற பதவிக்கு ரங்கசாமி ஒத்துக் கொள்ளவில்லை. வெறும் 6 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே வைத்துள்ள உங்களுக்கு (பா.ஜ.க.,வுக்கு) எப்படி அமைச்சரவையில் 4 பதவிகளை தரமுடியும் என்று ரங்கசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தநிலையில் நேற்றிரவு, முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (10ந் தேதி) இரவு, புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், வழக்கறிஞர் அசோக் பாபு ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட இன்னமும் பதவியேற்காத நிலையில் நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமித்து மக்களாட்சியின் மாண்புகளை மத்திய பா.ஜ.க அரசு சீர்குலைத்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பா.ஜ.க.,வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், தற்போதுள்ள நியமன எம்.எல்.ஏ.,க்கள் 3 பேரும் சேருவதால் சட்டசபையில் அக்கட்சியின் பலம் 9 ஆக கூடியுள்ளது. இதுதவிர 3 சுயேட்சை உறுப்பினர்கள் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆக, 12 பேர் ஆதரவு பா.ஜ.கவுக்கு உள்ளது.

என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். ரங்கசாமியிடம் துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை பெறவே அவசர அவசரமாக நியமன உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அடாவடி செய்துள்ளது என்ற சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

பா.ஜ.க.,வின் இந்த தன்னிச்சையான செயல்பாட்டினால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories