பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7,601 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 173 பேர் தொற்றால் இறந்துள்ளனர். இதனால் இம்மாநிலத்தில் மே 15ம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சண்டிகரில் உள்ள சராய் சாலையில் காவல்துறை அதிகாரி நவ்தீப் சிங் ரோந்து வந்துள்ளார். அப்போது சாலையோரம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய நவ்தீப் சிங் காய்கறி கூடைகளை எட்டி உதைத்தார். மேலும் உடனே கடையை அகற்ற வேண்டும் எனவும் விவசாயியிடம் வலியுறுத்தியுள்ளார்.
போலிஸ் அதிகாரி நவ்தீப் சிங் காய்கறி கூடையை எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து அவரை போலிஸ் உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாப் டி.ஜி.பி கூறுகையில், நவ்தீப் சிங்கின் செயல் முற்றிலும் வெட்கக்கேடானது மற்றம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரை இடைநீக்கம் செய்துள்ளோம். இத்தகைய தவறான நடத்தை எந்த நிலையிலும் பொறுத்துக்கொள்ளப்படாது. அதில் ஈடுபட்டவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கபுர்தலா காவல்துறையினர் தங்கள் ஊதியத்திலிருந்து காய்கறி விற்பனையாளருக்கு இழப்பீடு வழங்கியுள்ளனர்.