கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தினந்தோறும் 4 லட்சத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
கொரோனா தொற்றால் இந்தியா சந்தித்து வரும் சாவாலை எதிர்கொள்ள உலக நாடுகள் பலவும் உதவி செய்து வருகின்றன. மேலும் மோடி தலைமையிலான அரசு கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவு உதவி செய்யாததால் தன்னார்வலர்கள், சமூக நல அமைப்புகளும், நடிகர்கள், பொதுமக்கள் என பலர் தொற்றால் பாதித்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்ததிலிருந்தே நடிகர் சோனு சூட் பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டதால் சோனு சூட் மற்றும் அவரது அணியினர் இரவு முழுவதும் அலைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சோனு சூட்டின் உதவியால் 22 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களான சகோதரர்கள் இர்ஃபான் பதானும், யூசப் பதானும், கொரோனா தொற்றால் பாதித்த குடும்பங்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இர்ஃபான் பதான், "இந்தியா கொரோனா இரண்டாம் அலைப் பிடியில் சிக்கியிருக்கும் போது நாட்டு மக்களுக்கு உதவுவது எங்களது பொறுப்பு மற்றும் கடமையாகும். இதிலிருந்து உத்வேகம் பெற்ற கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்ஸ், தெற்கு டெல்லியில் கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு இலவச உணவு வழங்க முடிவெடுத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதற்கான தொலைபேசி எண்ணையும், கூகுள் படிவம் ஒன்றையும் இணைத்துள்ளனர், அதை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொண்டால் இலவச உணவு வீடு தேடி வரும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இர்ஃபான், யூசுப் பதான், தந்தை மெஹ்மூத் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.