கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் இந்தியா சிக்கிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதிலும் வட மாநிலங்களிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் அச்சத்தை அதிகரித்து வருகிறது.
அதிலும், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களின் நிலையோ மிகவும் மோசமாக இருக்கிறது. மருத்துவமனை படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தினந்தோறும் உயிரிழப்பு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும் தலைநகர் டெல்லியிலும் இதே நிலையில்தான் இருக்கிறது.
கடந்த சனிக்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படுக்கை இல்லாமல் காரில் காத்திருந்தபோது உயிரிழந்தார். இப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் படுக்கை வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தற்போது கூட, உத்தர பிரதேசத்தை சேர்ந்த நடிகை பியா கொரோனாவால் பாதித்துள்ள தனது சகோதரருக்கு உதவ வேண்டும் என ட்விட்டரில் உதவி கேட்டிருந்தார். அவருக்கு உதவி கிடைக்காத நிலையில் ஐந்து மணி நேரத்திலேயே அவரின் சகோதரர் உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பியா தனது ட்விட்டர் பதிவில், "உத்தர பிரதேச மாநிலம், ஃபரூகாபாத் மாவட்டத்தில் இருக்கும் என் சகோதரருக்கு வென்ட்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதி தேவைப்படுகிறது. யாராவது உதவ முடியுமா.. அவசரம்" எனக் கோரியிருந்தார். பிறகு ஐந்து மணிநேரம் கழித்து மற்றொரு பதிவில், "எனது சகோதரர் இறந்துவிட்டார்" தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதையை நடிகை பியாவின் ட்விட்டர் பதிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
மேலும் நடிகை பியா சில நாட்களுக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு, இதுபோன்ற கடினமான நேரத்தில் வலிமையாக இருக்கவேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.