கொரோனாவை பொறுத்தவரை, 85 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்படும். இது குறித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா, மக்களிடையே இப்போது தேவையற்ற பீதி காணப்படுகிறது என்றும் இதில் நன்மையை விட தீமையே அதிகம் என்றும் கூறினார்.
கொரோனா தாக்கிய ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு இயல்பாக இருந்தாலும், லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தாலும் உடனே மருத்துவமனைகளில் சேருவதையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மருத்துவமனைகள் நிரம்பி, தீவிர நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் போவதாக அவர் தெரிவித்தார். கொரோனாவை பொறுத்தவரை, 85 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்படும் என்றும், காய்ச்சல் மருந்துகள் மூலமோ அல்லது சாதாரண ஜலதோஷத்தைப் போல் நீராவி பிடிப்பதன் மூலமோ குணமடைந்து விடலாம் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார்.
கடுமையான நோய்த் தொற்று 10 முதல் 15 சதவீதம் பேருக்குதான் ஏற்படுகிறது என்றும், ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைப்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.