ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக் குழு எச்சரித்தும் மத்திய அரசு கண்டுகொள்ளாததும் தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை பெருமளவுக்கு உயர்துள்ளதை சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது ஆய்வு செய்தது.
குழு முன்பாக அப்போது ஆஜரான சுகாதாரத்துறை செயலாளரும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதை தெரிவித்துள்ளார். பல துறை நிபுணர்களின் கருத்தினைப் பெற்று ஒரு பரிந்துரை அறிக்கையை கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நிலக்குழு அறிக்கை அளித்துள்ளது.
பின்னர், இந்த அறிக்கை பிப்ரவரி 2 ஆம் தேதி மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தியை மத்திய அரசு அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
இதனை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுபினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பரிந்துரை அறிக்கைக்குப் பின்னரும் மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய மனித தவறு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.