தலைநகர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது தற்போது தெரிய வந்திருக்கிறது. அங்கு 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 142 நோயாளிகளுக்கு உயர் அழுத்த ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
அவர்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவதற்கு போதிய ஆக்சிஜன் இருப்பு இல்லாததால் கடந்த இரண்டு நாட்களாகவே ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று இந்த மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
நேற்றும் அவசர அவசரமாக ஆக்சிஜன் வழங்காவிட்டால் 40க்கும் மேற்பட்ட நோயாளிகளின் நிலைமை ஆபத்தில் முடியும் என்று நிர்வாகம் எச்சரித்திருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு ஒரு டேங்கர் ஆக்சிஜன் இங்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது.
ஆனாலும், அதற்குள் சுமார் 25 நோயாளிகள் உயிர் இழந்து விட்டார்கள் என்கிற தகவலை அந்த மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டு இருக்கிறது. மேலும் நேற்று இரவு கிடைத்திருக்கக் கூடிய இந்த ஆக்சிஜன் கூட அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
உடனடியாக ஆக்சிஜன் வழங்காவிட்டால் தற்போது சிகிச்சையில் உள்ள 60க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்கிற எச்சரிக்கையையும் கங்காராம் மருத்துவமனை வந்து வெளியிட்டு இருக்கிறது. தொடர்ந்து தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுபாடு நீடித்து வருகிறது.
ஒடிசா உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் டெல்லிக்கு திருப்பிவிட்டு இருந்தாலும் கூட வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆக்சிஜன் டேங்கர்களை வான்வழி மார்க்கமாக கொண்டு வர இயலாது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
காலி கண்டெய்னர்களை மட்டுமே விமானம் மூலமாக திரும்ப ஆலைகளுக்கு அனுப்ப முடியும் என்கிற தகவலையும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு சிக்கல்களும் ஆக்சிஜன் வழங்குவதில் நிலவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கங்காராம் மருத்துவமனை போன்ற வேறு பல முக்கிய மருத்துவமனைகளிலும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.