மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ் யெச்சூரி. 35 வயதாகும் ஆஷிஸ் யெச்சூரி சென்னையில் இருக்கும் ACJ இதழியல் கல்லூரியில் பயின்று, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி அருகே குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கிடையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி சிகிர்ச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணிக்கு அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவால், “எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களுக்கு நம்பிக்கையும் எனது மகனுக்கு சிகிச்சையும் அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ் யெச்சூரி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஷிஸ் யெச்சூரி மறைவு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், “சீத்தாராம் யெச்சூரியின் மகன் அஷிஸ் யெச்சூரி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து, மிகுந்த சோகமும், மனவேதனையும் அடைந்தேன். தனது மகனை இழந்து வாடும் சீத்தாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.