இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள், கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கோவிஷீல்ட் தடுப்பு மருந்து விலையை உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி கொள்முதலில் கையாளப்படும் கொள்கை குறித்து கேள்வியெழுப்பி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கொரோனா தடுப்பூசி தொடர்பான மத்திய அரசின் கொள்கையானது, 18 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது. தடுப்பூசி விலை விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக மோசமான முடிவைக் கைவிட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச்செய்வதே இலக்காக இருக்கவேண்டும்.
கடந்த ஆண்டில் கடுமையான பாடங்களை கற்றுக்கொண்ட நிலையிலும், மத்திய அரசு பாரபட்சமான மற்றும் தன்னிச்சையான கொள்கையை பின்பற்றுகிறது. இது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும்.
பா.ஜ.க அரசின் கொள்கையின் விளைவாக, கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் 3 விதமான விலை கொள்கையை கடைபிடிக்கிறது. ஒரு டோஸ் மருந்தின் விலை, மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம், தடுப்பூசிக்கு பொது மக்கள் அதிகபட்ச விலையை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் மாநில அரசின் நிதி நிலைமையில் கடுமையான சிக்கல் ஏற்படும்.
ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு 3 வெவ்வேறான விலை எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதை அனுமதிக்கும் முடிவு நியாயமானது இல்லை. கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், துயருற்ற மக்களிடம், லாபம் சம்பாதிக்க இந்திய அரசு அனுமதிப்பது ஏன்?
மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. போதிய அளவு ஆக்சிஜன் இல்லை., மருத்துவ உபகரணங்கள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில், மத்திய அரசு ஏன் இதுபோன்ற கொள்கையை கடைபிடிக்கிறது? 50 சதவீதம் தடுப்பு மருந்துகள் இருந்தாலும், கூட்டாட்சி தத்துவத்தை மனதில் கொண்டு, அதனை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமநிலையை கடைபிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.