இந்தியாவே கோவிட் வைரஸால் கடந்த ஆண்டு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிஸினஸ் டுடே இணைய இதழ் வெளியிட்ட ஒரு முக்கியமான செய்தியின் மொழியாக்கம் இது.
செய்தி வெளியான நாள், ஆகஸ்டு 28, 2020
“கடந்த சில மாதங்கள் பல துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் அவற்றை இயக்குபவர்களுக்கும் கடினமான காலமாக இருந்தது. காரணம், கொரோனா வைரஸ். ஆனால் சீரம் நிறுவனத்தின் நிறுவனரான சைரஸ் பூனாவாலா மட்டும் இந்த காலத்தில் பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்துக் கொண்டார். மார்ச் மாதத்தில் இந்தியாவை கோவிட் தாக்கியதிலிருந்து கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் அவருடைய சொத்து மதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது.
இந்தியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னான மார்ச் 23ம் தேதி வரை அவரின் சொத்து மதிப்பு 7.47 பில்லியன் டாலராக இருந்தது. அதற்கு பிறகு அவரின் சொத்து மதிப்பு பெரும் ஏற்றத்தை அடைந்தது. உலகின் முன்னோடி தடுப்பு மருந்து தயாரிப்பாளராக அவருடைய நிறுவனம் இருந்ததும் உலக முன்னணி மருந்து நிறுவனங்களுடனான கூட்டணியும் முக்கிய காரணங்களாக இருந்தன. கோவிட்டுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக தற்போது சீரம் நிறுவனம் இருக்கிறது.
பொதுமுடக்கத்துக்கு பிறகான ஐந்து மாதங்களில் மட்டும் ப்ளூம்பெர்க்கின் கோடீஸ்வர்கள் அட்டவணையின்படி பூனாவாலாவின் சொத்து மதிப்பு 84.7 சதவிகிதம் அதிகரித்து 13.8 பில்லியன் டாலரை எட்டியிருக்கிறது. அதிகரித்த அந்த மதிப்பின் பெரும்பான்மைக்கு காரணம் அவரின் சீரம் நிறுவனம்தான். அதன் மதிப்பு மட்டுமே 12.8 பில்லியன் டாலர். அதோடு சேர்த்து பூனாவாலாவின் குடும்பம் 522 பில்லியன் டாலர் மதிப்பிலான அசையா சொத்துகளையும் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ரொக்கத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் 250 ஏக்கர் நிலத்தில் பண்ணைகளும் சொத்துகளும் வீடுகளும் அவருக்கு மும்பையிலும் புனேவிலும் இருக்கின்றன.
சரியாக சொல்வதெனில் பூனாவாலாவின் மொத்த சொத்தையும் கொண்டு 7.16 மில்லியன் ட்ராய் அவுன்ஸ்கள் (1 ட்ராய் அவுன்ஸ் = 31.1 கிராம் எடை) அளவுக்கு தங்கத்தை வாங்க முடியும். 305 மில்லியன் பேரல்களுக்கு (1 பேரல் = 159 லிட்டர்கள்) கச்சா எண்ணெய் வாங்க முடியும். மருந்து தயாரிப்புக்குள் வருவதற்கு முன் பந்தய கார்களை தயாரிக்கும் திட்டத்தில் இருந்தார் பூனாவாலா. ஜாகுவார் டி வகையிலான மாதிரி ஸ்போர்ட்ஸ் கார்களை கூட அவர் அதற்காக தயாரித்தார். பிறகு பெரிய அளவிலான மூலதனம் தேவைப்படும் என்பது தெரிந்ததும் அம்முயற்சியை கைவிட்டார்.
1966ம் ஆண்டில் 12,000 டாலருக்கு அவருடைய குதிரைகளை விற்றும் தந்தையிடம் கடன் வாங்கியும் பூனாவாலா சீரம் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம்தான் இன்று உலகிலேயே பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் முன்னணியில் இருக்கும் மூன்று நிறுவனங்களில் அவருடைய நிறுவனமும் ஒன்று.
அவருடைய மகனான அதார் பூனாவாலாவின் தலைமையில் இயங்கும் நிறுவனம் தற்போது பிரிட்டிஷ்-ஸ்வீடன் நிறுவனமான ஆஸ்ட்ரா செனெகாவுடன் கூட்டு சேர்ந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கோவிட் 19-க்கான தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது.
2020ம் ஆண்டுக்குள் 40 கோடி டோஸ் மருந்துகளை மிகக் குறைந்த மற்றும் ஓரளவுக்கு வருமானம் கொண்ட நாடுகளுக்கு கொடுக்கவிருப்பதாகவும் மொத்தத்தில் 100 கோடி டோஸ்கள் கொடுக்கவிருப்பதாகவும் சீரம் நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. இரண்டாம் கட்ட பரிசோதனைகளை (Phase 2 trials) இந்த வாரத்தின் செவ்வாய்க்கிழமை அன்று நிறுவனம் தொடங்கியிருக்கிறது. 2020 மார்ச் 31 முடிவடைந்த நிதியாண்டு வரை கிட்டத்தட்ட 2,300 கோடி ரூபாய் லாப வருவாயும் 5,900 கோடி ரூபாய் மொத்த வருவாயும் ஈட்டியிருப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.”
மொழியாக்கம் முடிகிறது.
* ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்.
* இன்றைய நிலவரப்படி ஒரு பில்லியன் = 7,550 கோடி ரூபாய்.
சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்துதான் கோவிஷீல்ட்!
இதுவரை மத்திய அரசுடன் போட்ட ஒப்பந்ததின்படி 200 ரூபாய் விலையில் அரசுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 12ம் தேதி அதார் பூனாவாலா கொடுத்த பேட்டி ஒன்றில், “இந்திய அரசுக்கு முதல் 10 கோடி டோஸ்களை மட்டுமே 200 ரூபாய்க்கு கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருந்தோம். அதற்கு பிறகு 1000 ரூபாய்க்கு தனியார் சந்தைகளில் விலை நிர்ணயித்து விற்போம்” எனக் கூறியிருந்தார்.
தற்போது தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டினாலும் கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருப்பதாலும் மத்திய அரசு முக்கியமான முடிவை அறிவித்தது. அதாவது இனி தடுப்பூசி மருந்துகள் தனியாரிலும் விற்கலாம் என்றும் மாநில அரசுகள் நேரடியாகவே நிறுவனங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் 1ம் தேதியிலிருந்து 18 வயதை தாண்டிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இச்சூழலில் இன்று கோவிஷீல்ட்டின் விலையை சீரம் நிறுவனம் தனியாருக்கு 600 ரூபாய் எனவும் மாநில அரசுக்கு 400 ரூபாய் எனவும் நிர்ணயித்திருக்கிறது. கடந்த தினங்களில் மத்திய அரசு வெளியிட்ட தனியார் சந்தையில் மருந்துகள் விற்பனை பற்றி ஜனவரி 12ம் தேதியே அதார் பூனாவாலாவுக்கு தெரிந்திருக்கிறது. சரியாய் சொல்வதெனில் மத்திய அரசு போட்ட ஒப்பந்தமே அந்த அடிப்படையில்தான். பிறகு நேர்ந்த தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் மத்திய அரசுக்கு தெரியாமல் நேரவில்லை என்பதே இவற்றில் விளையும் புரிதல். அடிப்படையில், பிரதமராக நாம் ஒரு வணிகத் தரகரை பெற்றிருக்கிறோம்!