இந்தியா

600 ரூபாயாக உயர்த்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்து : மோடி அரசின் கையாலாகாத தனத்தின் வெளிப்பாடா?

மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கையை அடுத்து கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டதால் சாமானிய மக்களுக்கு தடுப்பூசி எட்டாக்கனியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

600 ரூபாயாக உயர்த்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்து : மோடி அரசின் கையாலாகாத தனத்தின் வெளிப்பாடா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கு தடுப்பூசிதான் சிறந்த வழி. அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என பக்கம் பக்கமாக பேசி வரும் மத்திய அரசு தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ஏற்றத்துக்கு வழி வகுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதால் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்யவும், வெளிச் சந்தையில் தடுப்பூசிகளை விற்கவும் அனுமதி அளித்திருக்கிறது மத்திய அரசு.

அதன்படி சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி முன்பு 250 ரூபாயாக இருந்த விலை தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் CEO வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 எனவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய அரசுக்கு எப்போதும் போல ரூ.150க்கே தடுப்பூசியை சீரம் நிறுவனம் வழங்கவுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரு டோஸ் ரூ.1500க்கும், ரஷ்யா, சீனாவில் ரூ.750க்கும் தடுப்பூசி விற்கப்படுவதை ஒப்பிட்டு இந்த விலையை நிர்ணயித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்குள் தாராளமாக சந்தையில் தடுப்பூசிகள் கிடைக்கும் வகையில் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் வாங்கினால் அதன் மீதான விலை மீண்டும் உயர்த்தப்படும் என்பதால் ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை 1000க்கும் மேல் விற்கப்படும் நிலை ஏற்படும். இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் அதிக விலை கொடுத்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள நிர்பந்திக்கப்படுவார்கள்.

ஏற்கெனவே கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்கள் மீது மீண்டும் மீண்டும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலாகவே மோடி அரசின் இந்த புதிய தடுப்பூசி கொள்கை உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. தனி ஒரு நிறுவனத்தின் லாபத்திற்காக ஒட்டுமொத்த இந்திய மக்களை வதைப்பது எவ்வாறு தன்னிறைவு பெற்றதாக கருத முடியும் எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories