மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஹர்ஷ்வர்தனை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி குறித்து எழுதிய கடிதத்தில் ஐந்து அம்ச யோசனைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கோரினார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தடுப்பூசி விநியோகம் தொடர்பான முன்னாள் பிரதமர் மன்மோகங் சிங்கின் கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதத்தில், "கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் கூறியுள்ள ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் கட்சியினருக்கும் பொருந்தும் தானே? ஆனால், உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் எனப் பலர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவின் தடுப்பூசி விநியோகம், தயாரிப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி நீங்களும், இந்த கடிதத்தைத் தயாரித்தவரும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் முதலில் உங்கள் கட்சியினருக்கு நிலையைத் தெளிவுபடுத்துங்கள்.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம், தரம் தாழ்ந்து மலிவான அரசியல் உள்நோக்கத்தோடு எழுதியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் கொரோனா போராளி இல்லை ஹர்ஷ்வர்தன். உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்பதற்காக நீங்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் துணிந்து நாட்டு மக்களைக் கொலை செய்கிறீர்கள்.
இந்த நேரத்திலும் கூட மத கூட்டங்களிலும், விழாக்களிலும் மக்களைத் திரளச் செய்து அவர்களையும் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மன்னிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.