தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத்தில் இருக்கும் தொரூரில் மாங்காய் தோப்பு உள்ளது. இங்கு சாய்பாபா நகரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், மாங்காய் தோப்புக்குள் நுழைந்துள்ளனர் இதைப் பார்த்த காவலர்கள் யாக்கு, ராமுலு ஆகியோர் சிறுவர்கள் இருவரையும் பிடித்து, மாங்காய் திருடியதாகக் கூறி அவர்களைக் கட்டிவைத்து அடித்துள்ளனர்.
மேலும், காவலர்கள் சிறுவர்களை வலுக்கட்டாயமாக மாட்டுச் சாணத்தைத் தின்ன வைத்துள்ளனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து மற்றொருவருக்கு பகிர்ந்துள்ளார். சிறுவர்களைத் தாக்கிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காவலர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் காவல்துறை விசாரணையில், சிறுவர்கள் இருவரும் மாங்காய் திருடுவதற்காக வரவில்லை என்றும், காணாமல் போன நாயைத் தேடியே தோப்புக்குள் வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. உண்மை என்னவென்றே தெரியாமல் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பதிவாகக்கூடிய குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையில் தெலங்கானாவில் மட்டும் 3.7% பதிவாகிறது. கடந்த 2019ம் ஆண்டில் 1,18,338 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் 2019ம் ஆண்டு தெலங்கானாவில் 873 கற்பழிப்புகள், 839 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடத்தல் வழக்குகள் 2,127 பதியப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக 18,394 குற்றங்கள் பதிவாகியுள்ளன.