இலங்கை ராணுவம், தமிழர்கள் மீது இன அழிப்பு தாக்குதல் நடத்தியது தொடர்பாக அந்நாட்டின் மீது சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்தன.
இதனைத் தொடர்ந்து, நேற்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், 22 நாடுகள் ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 14 நாட்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியைத் தமிழக மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பா.ஜ.க அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல். இச்செயல் ஒன்றே போதும், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து ஒரு மனதாகத் தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
பா.ஜ.கவின் பச்சைத் துரோகத்திற்குத் தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.