பொதுத்துறை வங்கிகளை தொடர்ச்சியாக மத்திய அரசு தனியார்மயமாக்குவதைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், நேற்று தமிழகத்தில் 16 ஆயிரம் பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி முன்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்ந்த 500க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் கிருபகரன், "மத்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறது. வாராக்கடன் மற்றும் பொதுத்துறை வங்கிகளை நடத்துவதற்கான பொருளாதார சிக்கல் உள்ளது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கிய ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடியை மத்திய அரசு என்ன செய்தது? மத்திய அரசு உடனடியாக பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் வங்கி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "மோடிக்கு ஆதரவான முதலாளிகளுக்கு அரசுத்துறை வங்கிகளை மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பதன் மூலம் இந்திய நிதி பாதுகாப்பை சீர்குலைப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசாங்கம் லாபத்தை தனியார் மயமாக்குகிறது. நஷ்டத்தை தேசியமயமாக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.